செய்திகள்

2026-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும்: எடப்பாடி உறுதி

Makkal Kural Official

விழுப்புரம், ஜூலை.11-

மு.க.ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி, 2026-ம் ஆண்டு அமையவுள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரசு பணத்தில் தி.மு.க.வை வளர்க்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற தலைப்பில் பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்தார்.

சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், நேற்று பகல் விழுப்புரம் அருகே பிடாகத்திற்கு வந்தார். அவருக்கு அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரச்சார பயண பஸ்சில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு கருத்து சொன்னேன். அதாவது, ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளை தொடங்கினார்கள். பரவாயில்லை, மாணவர்கள் பயன்அடைவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அறநிலையத்துறையில் இருந்து நிதியை எடுத்து கல்லூரிகள் அமைப்பதாக சொன்னார்கள். அதற்கு நான் சொன்ன கருத்துக்கு கண்ணு, காது, மூக்கு வைத்து விவாதம் நடத்துகிறார்கள்.

அறநிலையத்துறையில் இருந்து பணம் கொடுத்தால் எடப்பாடி கொதிக்கிறார் என்கிறார். அறநிலையத்துறையில் இருந்து நீங்கள் எடுத்துக்கொடுப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

கல்லூரிகளுக்கு தேவையான திட்டத்துக்கான முழுமையான நிதி அறநிலையத்துறையில் இருந்து கிடைக்காது. கல்லூரிகள் வளர வளர கட்டிடங்கள் பல தேவை. அதுவே அரசாங்க கல்லூரிகளாக இருந்தால் அனைத்தும் கிடைக்கும். ஆனால் அறநிலையத்துறையில் இருந்தால் நிதி பெறுவது சிரமம், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் இதை சுட்டிக்காட்டினேன்.

மாணவர்களின் எதிர்காலம் கருதி

ஏற்கனவே பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதால் தான் அரசு கல்லூரியாக மாற்றினோம், கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதால் தான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றினோம்.

அப்படியான நிலைமை அறநிலையத்துறையில் தொடங்கப்படும் கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்கிற உன்னத நோக்கத்தோடு, மாணவர்களின் எதிர்காலம் கருதிதான் சொன்னேன்.

வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின். ஏன் இந்த அரசாங்கத்தில் பணம் இல்லையா? திவாலாகி போச்சா?. உங்கள் தந்தை கருணாநிதிக்கு பேனா வைக்க 82 கோடி ரூபாய் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்த 42 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் மாணவர்கள் கல்வி கற்க அரசாங்கம் சார்பில் கலைக்கல்லூரி கட்டுங்கள் என்றால் நீங்கள் ஏன் தவறாக நினைக்கிறீர்கள். திட்டமிட்டு தவறான அவதூறான செய்திகளை பரப்புகிறீர்கள். இது கடும் கண்டனத்துக்கு உரியது.

மாணவர்களின் எதிர்காலம் கருதியும், அவர்கள் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றும் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். உங்களை போன்று ஏமாற்றும் கட்சி அண்ணா தி.மு.க. அல்ல. மாணவர்கள் மீது அக்கறை கொண்ட கட்சி அண்ணா தி.மு.க.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் 67 கலை, அறிவியல் கல்லூரிகளை கொடுத்தோம். உறுப்பு கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகம் செலுத்த வேண்டி உள்ளது என்று மாணவர்கள் சொன்னதால் 41 உறுப்பு கல்லூரிகளை அரசு கலைக்கல்லூரியாக மாற்றிக்கொடுத்தேன்.

17 மருத்துவக் கல்லூரிகளை

கொண்டு வந்தோம்

எங்களது வரலாறு தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேச வேண்டாம். அதுமட்டுமல்ல எங்கள் ஆட்சியில் 21 பாலிடெக்கனிக் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 வேளாண் கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தோம். உங்களால் ஒரு மருத்துக்கல்லூரியை கொண்டு வர முடிந்ததா?.

அதேபோன்று எங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் 17 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.

மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுத்து ஏழைகளும் டாக்டர் ஆகும் கனவை நிறைவேற்றியது அண்ணா தி.மு.க. அரசாங்கம். இதில் அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசாங்கமே ஏற்கும் என்று உத்தரவு போட்டேன். உங்களது ஆட்சியில் இப்படி ஏதாவது செய்தீர்களா?.

இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் முதல் மாநிலமாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்தது. உங்களது ஆட்சியில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை எங்கு உயர்ந்தது?.

விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை பட்டப்படிப்பு இருந்தது. இதற்கு 5 கோடி ரூபாயில் கட்டிடம் கட்டி கொடுத்தோம். ஆனால், இதுவரைக்கும் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கவில்லை. ஏன், ஏழை மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க கூடாதா?.

வருகிற 14-ந்தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கை தொடங்கவில்லை என்றால் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாணவர்களுக்கு தூரோகம் செய்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும். நீங்கள் வீழ்த்துவீர்களா?.

தற்போது தமிழகத்தில் 180 கலைக்கல்லூரிகள் உள்ளன. இதில் 96 கல்லூரிகளுக்கு முதல்வரும் இல்லை, பேராசிரியர்களும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி கல்வி வளரும்? இப்படி மோசமான ஆட்சி நடக்கிறது.

மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியான ஆட்சியை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் செல்வாக்கை இழந்த

ஸ்டாலின்

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் நடந்த பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். இந்த ஆட்சியில் நன்மைகளே இல்லை. துன்பத்தை தான் பார்க்க முடிந்தது. பெஞ்ஜல் புயலின்போது திட்டமிட்டு செயல்படாததால் இந்த விழுப்புரம் நகரம் தண்ணீரில் மிதந்தது.

ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல புயல்களை பார்த்ததது, புயல் வேகத்தியே மீட்பு பணியையும் செய்தோம். ஆனால் இந்த அரசாங்கம் மோசமான அரசாங்கம். மக்களுக்கான திட்டங்களை கொடுக்க முடியவில்லை, மக்களை பாதுகாக்க முடியவில்லை.

விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று கருதி அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைத்தோம். ஆனால் மாணவர்களின் நலன் பற்றி கவலைப்படாத தி.மு.க. அரசு, அந்த பல்கலைக்கழகத்தை ரத்து செய்து விட்டது. அதனால்தான் ஆண்டவர் அந்த அமைச்சரின் பதவியை பறித்துவிட்டார்.

இந்த மாவட்டத்தில் ரூ.1503 கோடியில் கடல்நீரை நன்னீராக மாற்ற புதிய குடிநீர் திட்டத்துக்கு நானே அடிக்கல் நாட்டினேன். அதையும் தி.மு.க. அரசு ரத்து செய்து விட்டது. அதை மன்னிக்கலாமா?. மக்களுக்கு துரோகம் விளைவித்த இந்த அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவீர்களா?.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் செல்வாக்கை இழந்துள்ளார். இன்றைக்கு வீடுவீடாக கதவை தட்டி தி.மு.க.வில் உறுப்பினர் ஆகுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு நாங்கள் கேவலமாக போகவில்லை.

இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக வீடுவீடாக விண்ணப்ப படிவங்கள் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். கடந்த 4½ ஆண்டுகள் ஆட்சியில் எங்கு போனார் முதலமைச்சர். இத்தனை நாட்கள் மக்களை ஏமாற்றிவிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் இப்படியொரு விளம்பர தாளை அச்சடித்து, அரசு பணத்தில் தி.மு.க.வை வளர்க்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விழிப்போடு இருங்கள்

இதுவே எதிர்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, மக்களின் குறைகளை மனுவாக எழுதி பெட்டியில் வாங்கினார். அப்படி கோரிக்கைளை தீர்த்து இருந்தால் ஏன் வீடு வீடாக நோட்டீசை கொண்டு கொடுக்கிறீர்கள். இவர்கள் தேர்தல் வந்தால் தான் மக்களை பற்றி நினைப்பார்கள். நீங்கள் விழிப்போடு இருங்கள்.

தற்போது மு.க.ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி. 2026-ம் ஆண்டு உங்கள் மூலம் அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக கரும்பு விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றி தருவதாக தொிவித்தார்.

பிரச்சாரத்தின்போது முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் அற்புதவேல், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், கண்ணன், ராஜா, எசாலம் பன்னீர், முகுந்தன், ரவிவர்மன், பன்னீர், நடராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், வளவனூர் நகர செயலாளர் முருகவேல், விக்கிரவாண்டி பேரூர் செயலாளர் பூர்ணாராவ், மரக்காணம் பேரூர் செயலாளர் கனகராஜ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையன், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ரெயின்போ ரகுநாதன், விவசாய அணி செயலாளர் பாண்டுரங்கன், மீனவரணி செயலாளர் பழனி, எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் பிரஸ் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *