மும்பையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

Makkal Kural Official

சென்னை, ஜூலை.6-

மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் புகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:-– இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும், அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பா.ஜ.க. தாங்கள் ஆட்சி செய்யும் மராட்டியத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

“உத்தரபிரதேசத்திலும், ராஜஸ்தானி லும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன? என்றும், இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன. இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

மத்திய அரசின்

பழிவாங்கும் போக்கு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ரசிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது. வெறுப்பின் பாற்பட்டது அல்ல. இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், “இந்தி படித்தால் வேலை கிடைக்கும்” என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விடமாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்து வரும் துரோகத்துக்கு பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை #livenews

Loading

One Reply to “மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

Leave a Reply to அழகு சுந்தரம் குலசேகரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *