செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, ஜன. 19:

25வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. யார் நலனிலும் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டம் இன்றும் 25ம் நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 25ம் நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முன்வரவில்லை. அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் பேச்சு நடத்தி, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு தீர்வைக் காணவும் திமுக அரசுக்கு திறன் இல்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது, கொடூரமாகத் தாக்குவது, மிரட்டுதல் போன்ற அடக்குமுறைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 26ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் படிப்பு பாதிப்பு

அண்மைக்காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒன்றரை மாதங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும் போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.

ஆனால் 25ம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ‘‘நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்தக் குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.

ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

இப்படிப்பட்ட மோசடி அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *