Box 1
உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் பங்கேற்பு
-: அமெரிக்காவில் இருந்து
ஆர் முத்துக் குமார் :-
வாஷிங்டன் டிசி அருகே மேரிலாந்து மாநிலம் பெதெஸ்டா நார்த் மாரியட் ஹோட்டல் & கான்பரன்ஸ் செண்டரில், 12-ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சிமாநாடு அக்டோபர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் பொருளாதார அறக்கட்டளை மற்றும் அமெரிக்கா-இந்தியா SME கவுன்சில் இணைந்து நடத்தும் இம்மாநாடு, உலகத் தமிழர்களின் பொருளாதார பங்களிப்பை வலியுறுத்தி, சர்வதேச அளவில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கும் முக்கிய தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறை முன்னோடிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச தொழில்நிறுவனத் தலைவர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்க மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநாட்டில் உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி, பசுமை ஆற்றல் மற்றும் நிலைத்த பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் வணிகம், இ-காமர்ஸ், பெண்கள் முன்னேற்றம், வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு தலைப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.
மேலும் B2B வணிக இணைப்பு சந்திப்புகள், தொழில்நுட்பக் கண்காட்சிகள், Crown Jewel Awards மற்றும் தமிழ்மாமணி விருதுகள் மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற உள்ளன. மாநாட்டின் நிறைவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உலகத் தமிழர் வணிக மற்றும் பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்தும் இம்மாநாடு, அடுத்த தலைமுறைக்கு வலுவான ஊக்கமாக அமையும்” என உலகப் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக்கழகத் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.





