செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை

Makkal Kural Official

தூத்துக்குடி, நவ. 24

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, நேற்று இரவு முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த கனமழையால், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் வார்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வளாகத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனைக்குள்

புகுந்த மழைநீர்

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழையால், மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 15,250 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11,060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குற்றாலத்தில் குளிக்கத் தடை

நேற்று முன்தினம் முதலே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அருவிகளில் குளிக்கத் தடைதொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2-ம் நாளாக இன்று மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

மதுரை, சிவகங்கை,

கொடைக்கானல்

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருங்காலக்குடி, தெற்குத்தெரு, சூரக்குண்டு, கீழையூர், தனியா மங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், திருவாதவூர், வெள்ளலூர், அம்பல காரன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொடைக்கானலில் தொடர் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.. அதிகபட்சமாக ஊத்தில் 232 மி.மீ, நாலுமுக்கில் 220 மி.மீ, சேத்தியாதோப்பில் 210 மி.மீ, காக்காச்சியில் 210 மி.மீ மழை பதிவாகியுள்ளது.மாஞ்சோலை, நாகப்பட்டினம், ஒரத்தநாடு பகுதிகளில் மிக கனமழை பதிவானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *