கோவை, ஜூலை 10–
கோவையில் கடந்த 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பரிதாபமாக பலியாகினர், 231 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, சிலருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜா என்கிற சாதிக் ராஜா என்பவர் தலைமறைவானார்.
இந்நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பான வழக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையிலான கோவை மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு தகவலின் அடிப்படையில் டெய்லர் ராஜா, சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.
சத்தீஸ்கரில் கைது
இதையடுத்து கடந்த 27 ஆண்டுகள் ஆக தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டெய்லர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தற்பொழுது கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை முழுவதும்
பலத்த பாதுகாப்பு
இந்நிலையில் போலீசார் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![]()





