செய்திகள்

எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Makkal Kural Official

பூஜ், அக்.3-

குஜராத்தின் ‘சர் கிரீக்’ பகுதியில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத்தின் ரன் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 96 கி.மீ நீளமுள்ள முகத்துவாரப்பகுதி சர் கிரீக் என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை குறித்து இரு தரப்புக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத்தின் எல்லைப்பகுதியான பூஜ்ஜில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தசரா கொண்டாடினார். மேலும் போர் தளவாடங்களுக்கு பூஜையும் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு விடுதலை அடைந்த 78 ஆண்டுகளை கடந்தபோதும், சர் கிரீக் பகுதியில் எல்லை பிரச்சினை தொடர்கிறது. இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் நோக்கம் குறைபாடுடையதாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது.

சர் கிரீக் அருகே உள்ள பகுதியில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ கட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கை அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தானின் எந்த அத்துமீறலுக்கும் பலத்த பதிலடி கொடுக்கப்படும். அது வரலாற்றையும், புவியியலையும் மாற்றக்கூடும்.

1965-ம் ஆண்டு போரின்போது லாகூரை அடையும் திறனை இந்தியா ராணுவம் காட்டியது. இன்று 2025-ல் கராச்சிக்கு செல்லும் ஒரு பாதை கிரீக் வழியாக செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் நாட்டின் எல்லைகளை விழிப்புடன் பாதுகாத்து வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்.

ஆபரேஷன் சிந்தூரின்போது லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதேநேரம் இந்தியாவின் பதிலடியில் அந்த நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்தியப் படைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை உலகுக்கு காட்டியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்பதால் இந்தியா நிதானத்தைக் காட்டியது. அதைப் பெரிதாக்கி போரைத் தொடங்குவது ஆபரேஷன் சிந்தூரின் நோக்கமல்ல.

ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து ராணுவ நோக்கங்களையும் இந்தியப் படைகள் வெற்றிகரமாக அடைந்துவிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *