சென்னை, நவ. 17:
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். அதேநேரம் அவர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில் 4 ஆண்டுகளிலும், இல்லாவிட்டால் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கேற்ற வகையில் ஊதியத்தின் அளவும் ஒரு நிலை உயர்த்தப்பட வேண்டும்.
அதன்பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை உதவிப்பேராசிரியர்களுக்கு தேர்வு நிலை உதவிப் பேராசிரியர்களாகவும், அந்த நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் நிலை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.
தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.
ஊதிய உயர்வுடன் கூடிய முழுமையான பதவி உயர்வு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப் படவில்லை; மாறாக மாணவர்களின் உயர்கல்வி ஆராய்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது, அது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
அப்போது தான் பதவி உயர்வுக்கான நிதிப் பயன்களும், அதிகாரங்களும் கிடைக்கும். இந்த அமைப்பில் சேர்க்கப்பட்ட இணைப் பேராசிரியர்களால் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இணைப் பேராசிரியர் பதவி உயர்வு இந்த அமைப்பில் சேர்க்கப் பட்டிருந்தால், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து அரசு செய்த துரோகத்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
காற்றில் கலந்தது
அமைச்சரின் வாக்குறுதி
இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை கடந்த ஜூன் 23&ஆம் தேதி அழைத்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஜூலை மாத ஊதியப் பட்டியலில் அவர்களின் ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக அரசுக்கே உரிய மோசமான இலக்கணத்தின்படி அந்த வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.
சாகும்வரை போராட்டத்துக்கு
பா.ம.க. ஆதரவு
முழுமையான பதவி உயர்வு வழங்காமல் முடக்கி வைப்பதற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முழுமையான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை டிசம்பர் 12ந் தேதி முதல் நடத்தவிருக்கும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()




