லண்டன், ஜூலை.25-
பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் நேற்று கையெழுத்தானது. இதையடுத்து, ”இரு நாட்டு உறவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்,” என, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
இந்தியா, பல்வேறு உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தகம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்றார். லண்டனில் நேற்று அவர் அந்த நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பேச்சுவார்த்தையின் நிறைவில் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் மற்றும் இங்கிலாந்து வர்த்தக மந்திரி ஜோனதான் ரெனால்டு ஆகியோர் கையெழுத்து போட்டனர்.
‘விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ எனப்படும் இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதி பொருட்களுக்கான வரி ரத்து மற்றும் குறைப்பு அமலாவதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான தற்போதைய வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியா– —– இங்கிலாந்து உறவில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம். பல ஆண்டு கடின உழைப்புக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ கையெழுத்தாகி இருக்கிறது.
சிறு, குறு, நடுத்தர
தொழில் துறை பலன்
இது இந்திய வேளாண் விளை பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத்துறைக்கு இங்கிலாந்து சந்தையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பலனடையும்.
மேலும் இந்திய ஜவுளிகள், காலணிகள், ரத்தினக்கற்கள், நகைகள், மீன் பொருட்கள் மற்றும் என்ஜினீயரிங் பொருட்கள் இங்கிலாந்தின் சிறந்த சந்தை வசதியை பெறும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டுறவுகளுக்கு புதிய உத்வேகத்தையும் சக்தியையும் அளிக்க இந்தியாவும், இங்கிலாந்தும் “தொலைநோக்கு 2035” என்ற செயல்திட்டத்தை வலுப்படுத்தி வருகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்ததற்காக நன்றி கூறுகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாட்டுக்கே இடமில்லை என்பதில் இந்தியாவும், இங்கிலாந்தும் உறுதியாக உள்ளன.
இந்திய, இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துவது போன்ற விஷயங்களில் ஒருங்கிணைப்புடன் நடந்து கொள்வதையும் தொடரும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். மேலும் உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும் விவாதித்தோம்.
அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது முக்கியானது. இன்றைய சகாப்தத்துக்கு “விரிவாக்கவாதம்” அல்ல, வளர்ச்சிவாதமே அவசியம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது உரையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என பாராட்டினார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியபின் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான ஒப்பந்தம் என்றும் கூறினார்.
![]()





