ஸ்ரீநகர், நவ. 26:
ஆபரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் நடத்தவிருந்த மிகப்பெரிய சதித்திட்டத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட 19 வீரர்களுக்கு நேற்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிஐஎஸ்எப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கப்பட்ட மே 6ம் தேதி இரவு, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் உரி நீர்மின்நிலையத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்புகள் ஆபத்திற்கு உள்ளாகின. உரி நீர்மின் நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை தளபதி ரவி யாதவ் தலைமையிலான குழு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே, அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பாகிஸ்தான் டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
![]()





