சென்னை, ஆக. 7–
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (6–ந் தேதி) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (6–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 6–ந் தேதி அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனி கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2025–ம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
237 மீன்பிடிப் படகுகள்
தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதை தனது கடிதத்தில் வேதனையுடன் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
![]()





