செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

Makkal Kural Official

நாக்பூர், ஜூலை 11–

75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோகன் பகவத்துக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயதாகிறது. அதேபோல பிரதமர் மோடியும் அதே மாதத்தில் 75 வயதை துவங்க உள்ளார்.

இந்த நிலையில் மோகன் பகவத்தின் கூற்றை குறிப்பிட்டு சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “நடைமுறை இல்லாமல் பிரசங்கம் செய்வது எப்போதும் ஆபத்தானது. 75 வயது வரம்பைப் பயன்படுத்தி மார்க்தர்ஷக் மண்டலுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது என்பது கொள்கைக்கு புறம்பானது, ஆனால் தற்போதைய ஆட்சி இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளன என்று கூறினார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. எனினும், பா.ஜ.க.வில் ஓய்வு பெறுவதற்கென குறிப்பிட்ட வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரான அமித் ஷா 2023-ல் கூறி இருந்தார். மேலும், “நரேந்திர மோடி 2029 வரை வழிநடத்துவார். அவர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை” என அமித் ஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *