வாஷிங்டன், டிச. 21–
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, உலகின் முதல் பெரும் பணக்காரராக மேலும் உயர்ந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில், எலானுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததால், எலானின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர் என்றளவில் உயர்ந்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் எலானின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது. இந்த நிலையில், 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், டிசம்பர் 2வது வாரத்தில் எலானின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. தற்போது ஒரே வாரத்தில் 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகின் இரண்டாவது பணக்காரரான கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் லாரி பேஜின் சொத்து மதிப்பு 252.6 பில்லியன் டாலர் ஆகும். அதேநேரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆரக்கிள் கார்ப்பரேஷன் என்ற மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லாரி எலிசனின் சொத்து மதிப்பு 242.7 பில்லியன் டாலர் ஆகும்.
தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பட்டியலில் உள்ள அடுத்த 3 பணக்காரர்களின் மொத்த மதிப்புக்கு சமம். இதனால் வரலாற்றில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





