சென்னை, ஆக.8-
70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் `முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை சென்னையில் 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு வழங்கும் பல்வேறு சேவைகள் மக்களின் வீடுதேடி சென்றடைய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்திலான செயல்பாட்டில் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்வதற்காக `முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை வருகிற 12-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
இத்திட்டத்தின் வாயிலாக 34 ஆயிரத்து 809 ரேஷன் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 குடும்ப அட்டைகளில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளர்கள் பயன்பெறுவர்.
அதேபோல் 91 ஆயிரத்து 969 குடும்ப அட்டைகளில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, கை ரேகை பதிவிடும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் வாகனங்களில் ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன்கடை விற்பனை யாளர்கள் வினியோகிப்பர்.இதற்காக அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அதே நாளில் மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





