சென்னை, ஆக.30–
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார்.
நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:–
ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8ம் நாள் நான் தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
2021ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரைக்கும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலமாக 32 லட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடைகின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் ப்ரொடக்ஷனை ஸ்டார்ட் செய்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி வந்திருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களே ஆதாரமாக (proof) இருக்கிறது.
என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கின்ற மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கின்ற மாநிலமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கின்ற காரணத்தால், தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றேன்.
5 நாடுகள், 36 ஒப்பந்தம்
இதுவரைக்கும், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு நான் பயணத்தை மேற்கொண்டு,
* அமெரிக்க பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* ஸ்பெயின் பயணத்தில் 3 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள்
* ஜப்பான் பயணத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என்று 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 18 ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது.
இந்த 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகதான் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டுச் செல்கிறேன்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
பெரியார் உருவப்படம்…
செப்டம்பர் 4-ம் தேதி, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் நடக்கின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு நடைபெற இருக்கிறது.
நாட்டிலேயே அதிவேகமாக வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் நம்முடைய தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க நான் செல்கிறேன். உங்களுடைய வாழ்த்துகள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்போடு நான் புறப்பட்டுச் செல்கிறேன் என்பதையும் உங்களிடத்தில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
கேள்வி – இது போன்ற பயணங்களால் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே பலன் உண்டா? ஏனென்றால், அண்ணா தி.மு.க. பொறுத்தவரையில் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அது பற்றி…
முதலமைச்சர் பதில் – வெளிநாட்டுப் பயணத்தைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி இதுகுறித்து கூட விமர்சனம் செய்திருக்கிறார். பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் தன்னுடைய பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்தப் பயணங்களும் இருந்திருக்கும் என்று நினைக்கிறார். ஆனால், நான் கையெழுத்திடுகின்ற அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றது, வந்திருக்கிறது!
தி.மு.க. பக்கம்
வாக்காளர்கள் வருகை
கேள்வி – தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் தான் இருக்கிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
முதலமைச்சர் பதில் –புதிய கட்சிகளும் வருகிறதோ – வரவில்லையோ; புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
கேள்வி – அண்மையில் பீகாருக்குச் சென்று வந்தீர்கள். பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
முதலமைச்சர் பதில் –யார் எப்படிப்பட்ட சதியை செய்தாலும், அதை முறியடிக்கின்ற வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு. ஏன், பீகாரில்கூட தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. உண்மையாகவே, நான் சென்றுவிட்டு வந்த அனுபவத்தைச் சொல்கிறேன். ஏனென்றால், அங்கும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது என்பதுதான் உண்மை!
கேள்வி – சி–வோட்டர்ஸ் கருத்துக் கணிப்புக் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
முதலமைச்சர் பதில்– எந்த கருத்துக் கணிப்பு இருந்தாலும், எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியைத்தான் தி.மு.க. கூட்டணி பெறப்போகிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
விஜய் அரசியல்
பிரவேசம்…
கேள்வி – விஜய்யின் அரசியல் வருகை குறித்து நீங்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அது குறித்து…
முதலமைச்சர் பதில் – சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கேள்வி – 2026-ல் தி.மு.க.வுக்கு – த.வெ.க. தான் போட்டி அணி என்று ஆணித்தரமாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சவாலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில் – நான் அதிகம் பேசமாட்டேன். இதற்கு நான் பேசவேண்டிய அவசியமில்லை. பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்டவேண்டும்.
![]()





