சென்னை, டிச. 23–
6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். அங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையிலும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவது குறித்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரப்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு செவிலியர்கள் 20 ந் தேதி முதல் கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன், துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை தொடர்ந்து நேற்றிரவு முதல் செலிவியர்க்ள் தங்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் அவர்களை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
![]()





