சென்னை, ஜூலை 26–
நீதிமன்ற அவமதி வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி் சேவை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நூதன தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை ஐகோர்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன் மற்றும் பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக சின்னதம்பி, எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி பட்டு தேவானந்த் (அண்மையில் ஆந்திரா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்) விசாரித்தார். அப்போது, 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் நேரில் ஆஜராகி, இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி விட்டோம். அதேநேரம், உத்தரவை அமல்படுத்த சிறிது காலதாமதம் ஆகி விட்டது என்று தெரிவித்தனர்.
ஆனால், மனுதாரர்கள் பணி நிரந்தரத்தை 3 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதாக செய்ததால், பண இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் நீதிபதி, மனுதாரர்களுக்கு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6.25 லட்சத்தை வழங்கவேண்டும் என்று கருத்து கூறினார். ஆனால், அதிகாரிகள் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், “இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது என்பது அதிகாரிகளுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நீதிபதியிடம் கூறினார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
தொடர்ந்து வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், “இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அமல்படுத்தவில்லை. எனவே, இந்த 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும், எதிர்காலத்தில் காலதாமதம் இல்லாமல் ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துவோம் என்றும் உத்தரவாதம் அளித்தும் பிரமாண மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் கோரும் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன். 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லதுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுக்கு செய்த சேவை குறித்து, பிரமாண மனுவை ஐகோர்ட் ஜூடிசியல் பதிவாளரிடம் தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை இந்த உத்தரவாதத்தை 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அமல்படுத்தவில்லை என்றால், அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும்”
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.
![]()





