செய்திகள்

44–வது பிறந்த நாள்: கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, ஜூலை 7–

இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 44–வது பிறந்த நாள்.

இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தோனியை அரிதான ஓ.ஜீ. (O.G) என்று செல்லமாக் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர், தன் வாழ்த்தில், ‘ஓ.ஜீ.’ என்றால் ஒரிஜினல் கேங்ஸ்டர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும். அதாவது அடுத்தவர்களிடமிருந்து ஒருவர் தன் செயல்பாட்டில் அடியோடு வித்தியாசப்பட்டிருந்தால்… நிஜமாகவே அதீத ஆற்றல் மிக்கவராக இருந்தால், அவரைப் பேச்சுவழக்கில் ‘ஓஜி’ என்று அடையாளம் காட்டி ஆராதிப்பது வழக்கம். அந்த விதத்தில் – தோனியை ஓஜி என்று செல்லமாக அழைத்திருக்கிறார் முதல்வர்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் எங்குமிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அவர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்திருப்பவர் தோனி. குறிப்பாக ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு (சிஎஸ்கே) நீண்ட நெடுங்காலம் கேப்டனாக இருந்தவர் தோனி. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவசரப்படாமல் காட்டி வந்திருக்கும் நிதானம் – பொறுமை, அமைதி, ஆட்டத்தில் புத்திசாலித்தனம்– அறிவுக்கூர்மை ஆகிய தனித்தன்மைகளே அவரை ‘கேப்டன் கூல்’ என்று அழைக்க வைத்திருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமிகச் சிறந்த ஆட்டக்காரர் என்ற உயரிய அந்தஸ்தில் ஆராதிக்க வைத்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *