சென்னை, டிச. 5:
ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, ‘இண்டிகோ’ நிறுவனம் தொடர்ந்து விமானங்களை ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமான நிலையங்களுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களை அடுத்து விமான ரத்து மற்றும் தாமதங்களை குறைக்க உரிய செயல்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய விமானிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவத்திற்கு விமானிகளின் பணி நேர கட்டுப்பாடுகள் காரணம் இல்லை என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறோம். மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் போதுமான அளவுக்கு விமானிகளை வழங்கியுள்ளன. மேலும் சரியான திட்டமிடல் மற்றும் முன் தயாரிப்பு காரணமாக அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை. போதிய ஆட்களை நியமிக்காத இண்டிகோ நிறுவன செயல்பாட்டின் விளைவாகும். முழுமையான பணியாளர் பணிநேர கட்டுப்பாடுகளை செயல்படுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் இருந்தபோதிலும், விமான நிறுவனம் போதுமான பணியாளர்களை பணி நியமனம் செய்ய தவறிவிட்டது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 4-ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 400 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத், டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவாவிலும் இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இண்டிகோ விமான நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பாதிக்கப்பட்ட எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கும் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த தாமதங்களின் தொடர்ச்சியான தாக்கத்தைக் குறைத்து இயல்புநிலையை மீட்டெடுக்க இண்டிகோ விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் திட்டமிடப்பட்ட விமானங்களில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். மேலும், விமான நிலையத்திற்கு வருவதற்கு, முன்பு, https://www.goindigo.in/ என்ற இணையதளத்தில் தற்போதையை நிலைமையை சரிபார்க்க அறிவுறுத்துகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது. விரைவில் இயல்புநிலையை கொண்டு வர கவனம் செலுத்துகிறது என தெரிவித்துள்ளது.
![]()





