சென்னை, டிச. 31–
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 4–ந்தேதி அன்று சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், 5–ந்தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட மகளிர் அணி எழுச்சிப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4.1.2026 – ஞாயிற்றுக் கிழமை மாலை பொதுக்கூட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி (சேலம் புறநகர் மாவட்டம்) 5.1.2026 – திங்கட்கிழமை மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி எழுச்சிப் பொதுக்கூட்டம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.
சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
![]()





