சென்னை, நவ.17–
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக சென்னை நகரிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவர் இணைந்திருந்தனர்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
ஆனந்தம் அமைப்பு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், மற்றும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து தகுதியான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் மறக்கமுடியாத அனுபவங்களும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாய், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தார்.
அவருடன் இசையமைப்பாளர் மற்றும் ரெயின் டிராப்ஸ் நல்லெண்ண தூதர் ஏ.ஆர். ரெஹானா, ரெயின்டிராப்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.பி. சாந்தோசம், மாநில திட்ட ஆணைய உறுப்பினர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், அனந்தம் நிறுவனர் பகீரதி ராமமூர்த்தி, ஆர்கானிக் உணவு நிபுணர் மண் வாசனை மேனகா மற்றும் ரெயின் டிராப்ஸ் குழுவினரும் பங்கேற்றனர்.
வேல்ஸ் குழுமம் வரவேற்றது
குழந்தைகள் அனைவரும் சென்னை முதல் தூத்துக்குடி வரை விமானப் பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயாவிற்கு சென்ற குழந்தைகள் அங்கு நடைபெற்ற சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தென்காசி செல்லும் குழந்தைகள் அங்கு இரவு தங்கியிருந்து பார்டர் ரஹ்மத் ஹோட்டலில் சிறப்பு இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.
மறுநாள் காலை, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பிறகு அமர் சேவா சங்கம், குற்றாலம் அருவி மற்றும் த்ரில் பார்க் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். பின்னர், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் குழந்தைகள் சென்னை திரும்பினர்.
இந்த முயற்சியைப் பற்றி ரெயின் டிராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில், ‘‘வானமே எல்லை என்பது வெறும் விமானப் பயண அனுபவம் மட்டுமல்ல, இது கனவுகளை உயர்த்தி, வானுக்கு எல்லை இல்லை என்பதை உரக்க கூறுவதாகும். ஒவ்வொரு
குழந்தையும் தங்களுக்கான இடம் உண்டு என்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கனவுகள் காணலாம் என்றும் உணர வேண்டும்.” என கூறினார்.
![]()




