சென்னை, அக். 28–
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமான எண்ணிக்கையில் நீக்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 216 நிறுவனங்களில் இருந்து 98 ஆயிரம் தொழில்நுட்பப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அமேசானும் இந்தபட்டியலில் இணைந்துள்ளது. மென்பொருள், கிளவுட் சேவை, இ காமர்ஸ் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதில் 10 சதவீத ஊழியர்களே பணி நீக்கம் செய்ய இருப்பதாக அமேசான் கூறியுள்ளது. ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் அதனை குறைத்து செலவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் அமேசான் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் குறைந்த எண்ணிக்கையிலான பணி நீக்கத்தைச் செய்த நிலையில் இப்போது மனிதவள மேலாண்மை, சேவைகள், ஏடபிள்யூஎஸ் தொழில்நுட்பப் பிரிவு ஆகிய துறைகளில் பணியாளர்களைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மேலாளர்கள் போன்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர். செய்யறிவு தொழில்நுட்பத் தேவை, செலவினக் குறைப்பு ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் அதிக ஆன்லைன் ஆர்டர்களுக்காக கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதும் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது. அதேநேரத்தில் சுமார் 2 லட்சம் தற்காலிக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
![]()





