செய்திகள்

27, 28ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Makkal Kural Official

சென்னை, ஜூலை 11–

27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

பிரதான கட்சிகளான தி.மு.க. தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது. ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நாளில் தான் அங்கு மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா நடைபெறவுள்ளது. கங்கை கொண்ட சோழீச்சுவரருக்கு மகா அபிஷேகம், ஆராதனைகள் செய்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூலை 26-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், தற்போது பிரதமர் மோடி வரவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *