சென்னை, டிச.31-
ரூ.13 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத்தை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து கடந்த 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதில் 6 துறைகளைச் சார்ந்த சுமார் ரூ.87,941 கோடி மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச்செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியான ஆய்வு கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய 6 துறைகளைச் சார்ந்த சுமார் ரூ.58,740 கோடி மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரூ.13,076.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உடன்குடி அனல் மின் நிலையம் (அலகு I) பணிகள் அடுத்த மாதம் (ஜனவரி) முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைப் பணிகள் மற்றும் நீலகிரியில் சூழல் பூங்கா அமைக்கும் பணியினை முடித்து பிப்ரவரி மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
![]()





