சென்னை, ஜூலை 20–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்லும் அவர், அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை, பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
இதன் பின்னர் 23-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
பொள்ளாச்சி–உடுமலை ரோடு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம்– ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதையடுத்து கோவை வரும் அவர் தனியார் ஓட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
![]()





