செய்திகள்

22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஜூலை.29-

சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இதில், சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். மேலும், தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை (லோகோ) மற்றும் காலண்டர் தொகுப்பை வெளியிட்டார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

உலகிலேயே மூன்றாவதாக நூற்றாண்டு காணும் கவுன்சில் என்ற பெருமையை தமிழ்நாட்டின் ‘நர்சிங் கவுன்சில்’ பெற்றுள்ளது. எனவே, இந்த கவுன்சில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நம்முடைய இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. தடுப்பூசி போடச் சென்ற டாக்டர்களையும், நர்சுகளையும் துரத்திய காலம் இருந்தது. அதையெல்லாம் கடந்து தடுப்பூசி போட்டு பல நோய்களை பரவாமல் தடுத்த பெருமை நர்சுகளுக்கு உண்டு.

அதேபோலதான் திராவிட இயக்கமும். சமூகத்தைப் பிடித்த நோய்களை தீர்ப்பதற்காக பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பகுத்தறிவு கருத்துகளை ஊர், ஊராக சென்று எடுத்துக்கூறினார்கள். ஆரம்பத்தில் மக்கள் அவர்களை எதிர்த்தார்கள். ஆனால், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நம்முடைய தலைவர்கள் தொண்டாற்றிய காரணத்தால்தான் இன்றைக்கு நம்முடைய தமிழ் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது.

கொரோனா காலத்தில் நர்சுகள் ஆற்றிய பணியை யாராலும் மறக்க முடியாது. பலரும் தங்களுடைய வீட்டை விட்டு, குழந்தைகளை விட்டு, பெற்றோர்களை கூட சந்திக்காமல் பணி செய்தார்கள். சில நர்சுகள் தங்களுடைய உயிரையும் தந்தார்கள். தமிழ்நாட்டில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் இந்த கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் நர்சுகளாக உருவெடுக்க தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும், சுகாதாரக் கட்டமைப்புகளும் தான் காரணம்.

கருணாநிதி சுகாதாரத்தின் மீதும், மருத்துவக் கட்டமைப்பின் மீதும் அக்கறையோடு இருந்தார். கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களை தேடி மருத்துவம் என்ற மிகப்பெரிய திட்டத்தை உங்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தி.மு.க. அரசு நர்சுகளுக்கு என்றும் பக்க பலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் எழிலன், தாயகம் கவி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *