‘மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும்’ என உறுதி
சென்னை, ஆக. 18–
மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.
மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 21-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் மாநாடு ஏற்பாடு பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன. 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள்ளார்.
மாநாடு ஏற்பாடுகள் மும்முரம்
தமிழக வெற்றிக்கழக மாநாடு பணிகள் மதுரையில் மும்முரமாக நடந்து வருகிறது. மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யை யாரும் நெருங்காத வண்ணம் 10 அடி இடைவெளியுடன் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள். மின்விளக்குகள் சில இடங்களில் பொருத்தப்பட்டு அதற்கான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல 3 இடங்களில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மாநாடு 21ந் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலை முதல் மாநாட்டு மேடையில் வேலு ஆசான் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் பேசுகிறார்.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார். தொண்டர்களை கட்டுப்படுத்த 1,500 தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையில் த.வெ.க. கட்சியினர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பள்ளிவாசல் மற்றும் கீழவாசல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று அங்கு வந்தவர்களிடம் மாநாட்டுக்கு குடும்பத்துடன் வருகை தருமாறு தாம்பூலம் வைத்து அழைத்தனர்.
![]()





