செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்

Makkal Kural Official

* கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல்

* மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்

தலைவருக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு

* விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம்

சென்னை, நவ. 5–

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார். த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது .நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர். பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் கூட்ட நெரிசலில்

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

முதல் தீர்மானமாக செப்டம்பர் 27–ந் தேதி மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து, கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பில், திட்டமிட்டு, கற்பனைக்கும் எட்டாத வகையில், பாதுகாப்புக் குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில், நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர். தமிழக அரசியல் வரலாற்றில், மாற்றத்தை விரும்பும் மக்களரசியலை மையமாகக் கொண்ட நம் இலட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள வந்து உயிர்நீத்த நம் சொந்தங்களான அந்தத் தியாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

பெண்கள் பாதுகாப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகள் நடந்தவண்ணம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து துன்பம் நேர்கிறதே, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தூக்கம் களைந்து எப்போது எழுவார்? என்றும் தெரியவில்லை. இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது என்பதைக் கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களையும் இச்சிறப்புப் பொதுக்குழு பதிவு செய்கிறது.

35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்

இதுவரை நம்முடைய மீனவச் சகோதரர்கள் 800 பேருக்கு மேல், இலங்கைக் கடற்படை தாக்கி மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நம் மீனவச் சகோதரர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் கைது நடவடிக்கையும் ஈவு இரக்கமின்றி, தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது.

இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே போல, நம் மீனவச் சகோதரர்கள் விஷயத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு, கண்மூடித் துயில் கொள்வதே வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் வாடிக்கையாகிவிட்டது.

கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல் உண்மையாகத் தர வேண்டும். மேலும், நம் மீனவச் சகோதரர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிய அரசு நகர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்

திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில், பீகாரில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதே அதற்குச் சான்று. ஆறு கோடி வாக்காளர்களுக்கும் மேல் இருக்கும் தமிழ்நாட்டில் அத்தனைப் பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? அவசர கதியில் நடைபெறும் இப்பணிகளால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நியாயமான, எந்தவித அரசியல் குறுக்கீடுமற்ற, சுதந்திரமான தேர்தல் நடைபெற, சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் இந்தக் குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விவசாயிகள் விரோத

ஆட்சிக்கு கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஊழல் – அவதூறு – அராஜகம்”

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை நேர்மையாக – உண்மையாக – ஆதாரங்களோடு சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் வழக்கு – கைதுகளால் மிரட்டும் தி.மு.க. அரசு, அவதூறு பரப்பும் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தி வருகிறது. அதனால், எந்த விதமான நியாய தர்மமும் இன்றி, ஆளும் கட்சியின் அவதூறுக் குழுக்கள் அராஜகமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கட்சியைத் தொடங்கியவரும், நமது கழகத்தின் ஆதர்ச தலைவராகவும் உள்ள அண்ணா சொன்ன, “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” என்ற கோட்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, “ஊழல் – அவதூறு – அராஜகம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் ஆளும் கட்சியின் கூலிப் படையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. அரசின் அராஜக

சர்வாதிகாரப் போக்கு

தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு விலைபோகாத ஊடகங்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வழக்கு, விசாரணை, கைது என்பனவற்றைப் பயன்படுத்தி அச்சுறுத்துகிறது. இது தமிழக அரசியல் சூழலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்து என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, சர்வாதிகார மாடல் தி.மு.க. அரசின் அராஜக – சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கூட்டணி நிலைப்பாட்டில்

தலைவருக்கு முழு அதிகாரம்

தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *