செய்திகள்

2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது; தேவாலயங்கள், கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

Makkal Kural Official

ஒரு பக்கம் கடும் குளிர்; இன்னொரு பக்கம் மழையை பொருட்படுத்தாமல் திரண்டனர்

சென்னை, ஜன. 1–

இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு 2026-ம் ஆண்டு பிறந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மக்கள் குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிப்பாட்டில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதே போல வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஷ்டலட்சுமிகளையும் தரிசித்தபின், மற்ற சந்நிதிகளை பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்களிலும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில், கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயில், புறநகர்ப் பகுதிகளில் உள்ளதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.

அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கொடையாளர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று இரவு 10 மணி வரை பக்தர்கள், தடையில்லா தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தணி முருகன் கோவிலில்…

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செந்தூர் முருகன், திருத்தணி முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், கைலாசநாதர் கோவில் மற்றும் ராமநாதபுரம் ராமநாத சாமி கோவிகளில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையிலேயே திரளாள பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேவாலயங்களில்

சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று 31-ம் தேதி நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டுஆராதனையும் நடந்தன. இதில் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பாரிமுனைதூய மரியன்னை இணை பேராலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசாஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறித்துவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *