கோவை, டிச. 25–
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தாக தெரிகிறது. எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து துரோகத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துள்ளார். இவற்றின் அடிப்படையில் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் இணையும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. இணைய வேண்டிய இடத்தில் இணைவோம் என்று கூறினார்.
கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்களே கோஷமிட்டு வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ், தினகரன் பேச்சு
பொங்கல் பண்டிகைக்கு பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை காணலாம் என்றும், அண்ணா தி.மு.க.வில் இருந்து மேலும் சிலர் விலகி தவெக-வில் இணைவார்கள். டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் எங்களுடன் பேசிக் கொண்டு இருப்பது உண்மைதான். அவர்கள் எப்போது முடிவை எடுப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அரசியல் பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறதா? புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி காலம் போல எனது அரசியல் பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மலேசியாவில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தவெக கொங்கு மண்டலத்திலும் வெற்றி வாகை சூடும் என்றார்.
![]()





