புதுடெல்லி, ஜன. 1–
இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திரவுபதி முர்மு, ‘‘இந்த புத்தாண்டு புதிய சக்தி மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளமாக இருக்கட்டும். சுயபரிசீலனை மற்றும் புதிய தீர்மானங்கள் எடுக்கவும் இது நல்ல வாய்ப்பு. இந்நாளில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
‘‘2026 புத்தாண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்க புதிய சக்தியை அளிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
மோடி
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி கூறியிருப்பதாவது:–
“அனைவருக்கும் 2026 அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்”.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
“அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
கவர்னர் ரவி
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘2026 விடியல், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும். நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை நிரப்பட்டும். நிலையான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஒன்றாக முன்னேறுவோம்’’ என்று கூறியுள்ளார்.
![]()





