செய்திகள்

2025ல் இந்தியாவின் மகத்தான சாதனை: மோடி பெருமிதம்

Makkal Kural Official

* கிரிக்கெட் வெற்றி * அறிவியல் கண்டுபிடிப்பு

* ‘ஆபரேஷன் சிந்தூர்’

புதுடெல்லி, டிச.28–

‘நடப்பு ஆண்டில் (2025) கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் என இந்தியா மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது’ என பிரதமர் மோடி பெருமிதத்தோடு கூறினார்.

அறிவியல், விண்வெளித் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார் என்றும் மகிழ்ச்சி பெருமிதத்தோடு கூறினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் இன்று இந்த ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில், 2025ம் ஆண்டில் பெருமைமிகு தருணங்களை பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:

2025-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பெருமைமிக்க மைல்கற்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகின் மிகப்பெரிய துறைகள் என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது.

ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும், பெண்களுக்கான கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம், 2025-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. மேலும், இந்தியாவின் மகள்கள் மகளிர் பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தனர்.

ஆசிய கோப்பை டி-20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதன் மூலம் மூவர்ணக் கொடி பெருமையுடன் வானில் பறந்தது. மேலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்று தாயகம் திரும்பினர். அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

பாரா தடகள வீரர்கள்

வெற்றி வாகை

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், பாரா தடகள வீரர்கள் எந்த தடையும் உறுதியைத் தடுக்க முடியாது என நிரூபித்துள்ளனர்.

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க உதவியது. இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்ற செய்தியை உலகுக்கு அனுப்பியது.

இந்திக்காரர்களும்

தமிழ் கற்றனர்…

எனது தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் கற்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு தமிழ், ஹிந்தி பேசுவோரை இணைத்தது. இதில் ஹிந்தி பேசுவோரும் தமிழ் பேச கற்று கொண்டனர். அவர்கள் பேசியதை கண்டு நான் வியந்தேன்.

தமிழ் பெரும் கலாசாரமான மொழி ஆகும். நம்பிக்கை, கலாசாரம் மற்றும் பாரதத்தின் தனித்துவமான பாரம்பரியம் அனைத்தும் 2025ல் ஒன்றாக காணப்பட்டன. ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டது. இது உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கொடியேற்ற விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது.

வந்தே மாதரம்

150வது ஆண்டு விழா

‘வந்தே மாதரம்’ வெற்றிகரமாக 150 ஆண்டுகளை கடந்துள்ளது. இதற்கான இயக்கத்தில் நாட்டு மக்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர், மகிழ்ச்சி.

இன்றைய இளையத் தலைமையினர் தங்களுக்குள் இருக்கும் திறமைகளைக் காட்ட மேடைகள், வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஒருவரில் ஒன்று தான் ஸ்மார்ட் இன்டியா ஹேக்கத்தான். 80 அரசாங்கத் துறைகளில் 270–க்கும் மேற்பட்ட பிரச்சினைகளை கையில் எடுத்து அவற்றுக்கு வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளனர். ஒன்று போக்குவரத்து தொடர்பான பிரச்சினை. அவர்களின் புதிய சிந்தனையும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அணுகுமுறையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

‘சூரியசக்தி’ சாதனைகளை பொருத்துபவர்களுக்கு அரசு ரூ.75000 முதல் ரூ.80000 வரை நிதிஉதவி அளித்து வருகிறது.

பிஜி தீவில்

பிஜி தீவில் கடந்த மாதம் ‘தமிழ் நாள்’ கொண்டாடப்பட்டது. அதில் குழந்தைகள் தமிழில் பேசியது, பாடல்களை மனனம் செய்து ஒப்பிவித்து பேசியது அனைவரையும் ரசிக்க வைத்தது – மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

ஆண்டி பயாட்டிக்ஸ் மாத்திரைகளை தானாகவே இஷ்டம் போல் யாரும் போட்டுக் கொள்ளக்கூடாது.

மருத்துவர்கள் அறிவுரை – பரிந்துரை அவசியம். உடல் நலத்தைப் பேணிக்காக்க ஆரோக்கிய வாழ்வுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

‘பிட் இண்டியா மூமெண்ட்– உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இயக்கம் என்றால், இதைத் தான் சொல்வேன். நீங்கள் உடலை உள்ளத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருங்கள். நாளும் தேகப் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *