புதுடெல்லி, ஜூலை.1-
கடந்த 2024-–25ல் ஜி.எஸ்.டி. வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.22.08 லட்சம் கோடியை எட்டி, முந்தைய ஆண்டை விட 9.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. மாதந்திர ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது. மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.
கடந்த 2024-–2025 நிதியாண்டில், மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.22 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உச்சம் தொட்டுள்ளது.
கடந்த 2020ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே, 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வசூல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
மேலும், முந்தைய 2023-–2024 நிதியாண்டின் வசூல் ரூ.20 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் 2024-–2025 நிதியாண்டின் வசூல் 9.40 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
2024-–2025 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் கோடியாகவும், 2023-–2024 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடியாகவும், 2021-–2022 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகவும் இருந்தது.
மேலும், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த 2017-ம் ஆண்டில், ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. தற்போது, 1 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது.
![]()





