திருவள்ளூர், டிச. 31–
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 20 விவசாயிகளுக்கு ரூ.28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் 2025-–26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்; பசுந்தாள் உர சாகுபடியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு. இறவைப் பாசனப் பகுதிகளில் திருவள்ளுர் மாவட்டத்தில் 7500 ஏக்கரில் ரூ.93.73 இலட்சம் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு விவசாயிகளுக்கு தற்பொழுது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒருகிலோ முழு விலையாக ரூ.129.4 இதில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.62.50 வழங்கப்பட்டு வருகிறது.
சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: சம்பா பருவ நெல் அறுவடைப்பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 28 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 4 இடங்களிலும் ஆக மொத்தம் 32 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டிடங்களில் திறக்கப்பட்;டு; விவசாயிகளிடமிருந்து கொள்முதல் பணி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், திருவள்ளுர் மற்றும் திருத்தணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்கிறது. இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யப்பட்டு பணம் நேரடியாக வங்கி கணக்கு வரவு வைக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய பண்ணை வாயில் வார்த்தக வசதி உள்ளது. ஏனவே, இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ்,இணை இயக்குநர் (வேளாண்மை) க,செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் குமரவேல், கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மரு.ப.ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
![]()





