செய்திகள்

20 நிமிடம் தாமதம்.. ‘தண்டால்’ எடுத்த ராகுல்

Makkal Kural Official

போபால், நவ. 10–

காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு 20 நிமிடம் தாமதமாக ராகுல் காந்தி வந்ததால், அவர் மேடையிலேயே 10 முறை தண்டால் எடுத்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார்.

இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக பீகார் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி நேரடியாக வந்ததால் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து சச்சின் ராவ் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் கூட்டத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு. அப்போதுதான் கட்சி தொண்டர்களும் ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி சொன்னார்.

நேராக தனது சீட்டில் உட்கார சென்ற ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என்று சொல்லி சச்சின் ராவ் மீண்டும் சிரித்தார்.

அவர் சொன்னதை கேட்ட ராகுல் காந்தி மேடையிலேயே 10 முறை தண்டால் எடுத்தார். இதை பார்த்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தி ஆரவார கோஷம் எழுப்பினர். இது கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார். மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபினவ் பரோலியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ராகுல் காந்தி இதைச் செய்வது ஒன்றும் புதிதல்ல, எங்கள் முகாமில் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறோம். கட்சியில் அனைவரையும் சமமாக நடத்தும் ஜனநாயகம் உள்ளது. பா.ஜ.க.வைப் போல் எங்கள் கட்சியில் முதலாளித்துவம் கிடையாது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *