செய்திகள்

2–ம் சுற்று என்ஜினீயரிங் கலந்தாய்வு துவங்கியது

Makkal Kural Official

சென்னை, ஜூலை.27-

என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது.

என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ந் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 16-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், 17-ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிட்டும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் அந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாக நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 26,719 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதுதவிர அரசு பள்ளி மாணவ-ர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 இடங்கள் நிரம்பியுள்ளன. ஆக முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் என்ஜினீயரிங் படிப்புகளில் 28,896 இடங்கள் நிரம்பி உள்ளன.

தமிழ்நாட்டில் 425 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,87,227 இடங்களில் 28,896 இடங்கள் போக மீதம் 1,58,331 இடங்கள் இருக்கின்றன. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், பொதுப்பிரிவில் மொத்தம் 425 கல்லூரிகளில் 30 கல்லூரிகளில் 60 சதவீதத்துக்கு மேல் இடங்களும், 43 கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களும் நிரம்பியுள்ளன. 6 அரசுக் கல்லூரிகள் உள்பட 296 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் நிரம்பியுள்ளதையும், 142 கல்லூரிகளில் இதுவரை ஒரு இடம்கூட யாரும் எடுக்காத நிலையையும் இருக்கிறது.

கணிணி அறிவியல் முன்னணி

200-க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 116 மாணவர்களில் 63 மாணவர்கள் கணினி அறிவியல் என்ஜினீயரிங் படிப்புகளையே தேர்வு செய்துள்ளன.

மேலும் சிவில், விண்வெளி, வேதியியல், உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் எதிர்பார்த்தபடி மாணவர்களின் விருப்பம் குறைவாகவே இருந்திருக்கிறது என்றும், பீங்கான், ரப்பர்-பிளாஸ்டிக், ஜவுளி, பெட்ரோலியம், தோல் பேஷன் டெக், மருந்து போன்ற சிறப்பு படிப்புகளை உயர்கல்வி நிறுவனங்களில் கூட யாரும் எடுக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க பொதுப் பிரிவில் 98,575 மாணவ-ர்களுக்கும், அரசு பள்ளியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 16,259 மாணவ-ர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதில் மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை கொண்டு தேர்வு செய்வதை தவிர்த்து, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள கல்லூரிகளின் விவரங்களை பார்த்து தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *