சென்னை: , டிச. 28–
தமிழக அரசியலும் திரைத்துறையும் ஒரேவேளை சோகத்தில் மூழ்கியவர், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று, 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தை தேமுதிக குருபூஜையாக அனுசரித்து வருகிறது.
நினைவு நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், கருநாகராஜன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பிரபலர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் பல்வேறு சமூக நலப்பணியில் முன்னணி வகிக்கும் சமூக தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, விஜயகாந்தின் பணிகள் மற்றும் சமூக பங்களிப்புகளை நினைவுகூரினர்.
மேலும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாக நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினர். 2-ம் ஆண்டு நினைவு தின விழா, விஜயகாந்தின் நினைவையும் அவரின் சமூக, அரசியல், திரைத் துறையில் செய்த சேவைகளையும் மக்கள் முன்னிலையில் மீண்டும் நினைவுகூரும் அரிய வாய்ப்பு அமைத்துள்ளது.
![]()





