சென்னை, ஜூலை 30–
தமிழக அரசியலில் 1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மதுரை மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்காக MY TVK (மை டிவிகே) என்னும் செயலியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் ‘வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தையும் விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் ‘மை டிவிகே’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை த.வெ.க. உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு ஓடிபி-யும் கேட்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
ஆட்சி அமைப்போம்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:–
தமிழக அரசியலில் 1967, 1977ம் ஆண்டு தேர்தல்கள் திருப்புமுனையாக அமைந்தன. இந்த மிகப்பெரிய 2 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அந்த 2 மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்ற அனைத்து மக்களையும் சந்தித்தனர்.
அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு விஜய் பேசினார்.
![]()





