சென்னை, செப்.15-
அண்ணா பிறந்தநாளையொட்டி 193 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதியான அண்ணா பிறந்த நாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல்துறையில் ஏட்டு முதல் போலீஸ் சூப்பிரண்டு வரையிலான 150 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குனர் வரையிலான 22 பணியாளர்கள் மற்றும் அலுவலர் களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்,
ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல்படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 தடய அறிவியல் துறை பணியாளர்களுக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜு மற்றும் முன்னணி தீயணைப்போர் புனிதராஜு ஆகிய இருவரும் 12.12.2024 அன்று திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள சிட்டி ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 32 நோயாளிகளை, சவாலான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும் மிகுந்த ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து, பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 12.5.2025 அன்று மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை, பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய தீயணைப்போர் ராஜசேகர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ஆற்றில் குதித்து சிறுவனை மீட்டு, முதலுதவி செய்து, சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
இவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி, இந்த 3 பேருக்கும் முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த பதக்கங்களை முதலமைச்சர் மற்றொரு விழாவில் வழங்குவார்.
![]()





