செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : செங்கோட்டையன் தகவல்

Makkal Kural Official

ஈரோடு, டிச.12:

டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார்.

ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார பொதுக்கூட்டம் 18-ந் தேதி விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, விஜய் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். விஜய் தான் வருங்கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்.

நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அண்ணா தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

அண்ணா தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் விருப்பப்பட்டு, தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர் காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். புதிதாக வந்தவர்கள் என்னை உறுப்பினராக நீக்க முடியாது. என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது அண்ணா தி.மு.க.வில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *