ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12–
‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதால், தோல்வி அடைந்ததாக’’ ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்–1 என்ற செயற்கைக்கோளுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் இன்று காலை ஏவ திட்டமிடப்பட்டது. இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. அதேபோல் ஸ்பெயின் ஸ்டாா்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது. அதைப் பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட இருந்தது.
இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சற்று நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து பி.எஸ்.எல்.வி சி–62 ராக்கெட் திட்டம் தனது இலக்கை அடையவில்லை. 3வது நிலையில் ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகிச் சென்றது.
வி. நாராயணன்
இதுகுறித்து ‘இஸ்ரோ’ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
இன்று பிஎஸ்எல்வி சி62 / இஓஎஸ் – என்1 திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளோம். பிஎஸ்எல்வி ராக்கெட் இரண்டு திட எரிபொருள் நிலைகள் மற்றும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட நான்கு நிலை ராக்கெட் ஆகும்.மூன்றாவது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்தது. மூன்றாவது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளைக் கண்டோம். இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. திட்டம் தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பிஎஸ்எல்வி–சி62 திட்டத்தின் 3வது நிலையின் முடிவில் ஒரு கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





