சென்னை, ஜன. 9:
16-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சாலை அமர்ந்து போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர்.
அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 15-வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதன்படி இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக அண்ணாசாலை நோக்கி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் இன்று 16–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
![]()





