சென்னை, டிச. 11:
2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15–ந்தேதி முதல் 23ந் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 – திங்கட்கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’.
இவவாறு அவர் கூறியுள்ளார்.
![]()





