செய்திகள்

14வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

Makkal Kural Official

சென்னை, ஜன. 8–

14–வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலைய ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது. ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் 14 வது நாளாக இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். சென்னை எழும்பூர் மேம்பாலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *