செய்திகள்

125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 22:

125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பிலும் மேம்பாட்டு கட்டமைப்பிலும் ஒரு தீர்க்கமான சீர்திருத்தத்தை குறிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-ஐ (‘விபி -ஜி ராம் ஜி’ மசோதா) அதாவது 125 நாள் வேலைத்திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், 2005-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன சட்டப்பூர்வ கட்டமைப்பாக உள்ளது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கிராமப்புற குடும்பத்திற்கு 125 நாட்களுக்கு குறையாத ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது.

* விதைப்பு, அறுவடைப் பணிகள் நடைபெறும் காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவில் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்கள் வரை மொத்தமாக ஒரு இடைநிறுத்தக் காலத்தை அறிவிக்க இந்தச் சட்டம் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

* முழுமையாக 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அப்படியே இருக்கும். அந்த வேலை மீதமுள்ள காலத்தில் வழங்கப்படும்.

* சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படும்.

* இந்தச் சட்டம் ஊதியத்தை வாராந்திர அடிப்படையிலோ அல்லது வேலை முடிந்த 15 நாட்களுக்குள்ளாகவோ வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், விதிகளின்படி தாமதத்திற்கான இழப்பீடு வழங்கப்படும்.

* இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்துடனான வேலைவாய்ப்பு, நான்கு முன்னுரிமைத் துறைகளில் பொதுச் சொத்துக்களை உருவாக்குவதுடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது.

* இந்த சட்டம் ஒரு மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. இது மாநில அரசுகளால், சட்டத்தின் விதிகளுக்கு இணங்க செயல்படுத்தப்படும்.

* மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையேயான செலவுப் பகிர்வு முறை 60:40 என்ற விகிதத்தில் அமையும். வடகிழக்கு, இமயமலைத் தொடரிலுள்ள மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் செலவுப்பகிர்வு இருக்கும். சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதியுதவியாக இது அமையும்.

* விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் மாநில வாரியான ஒதுக்கீடுகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

மேலும், இந்த சட்டம் முந்தைய தகுதியிழப்பு விதிகளை நீக்கி, வேலையின்மைக்கான நிவாரண நிதி உதவிப் படியை ஒரு அர்த்தமுள்ள சட்டப்பூர்வப் பாதுகாப்பாக மாற்றுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாத பட்சத்தில், 15 நாட்களுக்குப் பிறகு வேலையின்மைக்கான நிவாரண உதவிப் படி வழங்க வழிவகை செய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *