செய்திகள்

12–ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 29–

12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-–26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–-

ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக்கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025–-2026–ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 7.5.2025இல் தொடங்கி தற்போது முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி வாய்ப்பை தவறவிட்டோம் என்று சோர்வடைந்து விடாமல் இருக்க அவர்கள் உயர்கல்வி வாய்ப்பினை பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதளத்தில்

இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இக்கல்வியாண்டே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைகான விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாணாக்கர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *