செய்திகள்

1,000 அரங்குகளுடன் சென்னையில் 49–வது புத்தகக்காட்சி

Makkal Kural Official

ஜனவரி 8–ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச.21-

1,000 அரங்குகளுடன் நடைபெற உள்ள சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-–ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணை செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், வருகிற ஜனவரி 8-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக் காட்சியை தொடங்கி வைத்து, கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்க இருக்கிறார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

கலைஞர் பொற்கிழி விருது கவிதைக்காக கவிஞர் சுகுமாரனுக்கும், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யாவுக்கும், சிறந்த நாவலுக்காக இரா.முருகனுக்கும், சிறந்த உரைநடைக்காக பேராசிரியர் பாரதி புத்திரனுக்கும் (சா.பாலுசாமி), சிறந்த நாடகத்திற்காக கருணா பிரசாத்திற்கும், மொழிபெயர்ப்புக்காக வா.கீதாவுக்கும் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது.

புத்தகக்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை முழு நேரமும் செயல்பட உள்ளது. புத்தகக்காட்சியில் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 25 லட்சம் வாசகர்களை வரவழைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், வாசகர்களின் நலன் கருதி இந்த முறை அனுமதி இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புத்தகக்காட்சியின் இறுதி நாளில் பபாசி சார்பில் பல்வேறு விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *