செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து எடப்பாடி பழனிசாமி, எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Makkal Kural Official

சென்னை, டிச.18:

100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-–

“பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக் ஷித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

3 வேளாண்மை சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா, பழனிசாமி?

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கி கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தி திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்க கூடவா தயக்கம்?

திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அண்ணா தி.மு.க. எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

வறுமையை ஒழித்த சாதனைக்கு தண்டனையாக தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டுக்கொடுக்கப்போகிறார் எதிர்க்கட்சி தலைவர்?

இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு அண்ணா தி.மு.க. என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை, தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *