சென்னை, ஜன. 21:
100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-–
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, அனைவரும் ஓய்வு எடுக்காமல் தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும். கவர்னர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்பு செய்திகளாக சொல்லியிருக்கோம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால்தான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள்.
உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்ப நினைக்கிறார்கள். அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். ஒரு குடும்பம் விடாமல் அனைவரும் பயனடைய வேண்டும் என பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கோம். அந்த பயனாளிகள் அனைவரையும் இனிமேல் நமது வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி நிலை முகவர்களை வைத்து, மண்டல அளவில் பெரிய கூட்டங்களை நடத்தினோம். கடந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றோம். அதன்பிறகு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கி 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நியமித்து இருக்கிறோம்
தற்போது 4 மண்டலங்களிலும் அவர்களை திரட்டி மாநாடு நடத்தப் போகிறோம். இதுவே ஒரு மண்டலத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொள்ளும் அளவுக்கு பெரிய மாநாடுகளாக இருக்கும்.
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ, ஆணவமோ, அதிருப்தியோ வெளிப்படக் கூடாது. அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகி விடக்கூடாது. தெளிவாகச் சொல்கிறேன். கூட்டணி, தொகுதி பங்கீடு, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பை கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உள்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக்கூடாது. அனைவரையும் அரவணைத்து போக வேண்டிய பொறுப்புகளில் இங்கே இருக்கும் அனைவரும் இருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக, ரொம்ப உறுதியாக, வலிமையாக இருப்பது நாமதான் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும். அவற்றை தி.மு.க. தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம்.
உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். வெல்வோம் 200. படைப்போம் வரலாறு என்றார்.
ஸ்டாலின் எச்சரிக்கை
‘நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிவிட்டது. இனி நம் சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். இங்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்.
தேர்தல் வருகிறது நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். தனிநபர்களை விட கட்சிதான் பெரிது
எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.’ என்று அறிவுரையும் வழங்கினார்.
![]()





