சென்னை, ஜன.6-
‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில், கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அமைச்சர் கோவி.செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
10 லட்சம் மாணவ-–மாணவி களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவ–-மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:-
இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த உலகத்தையும் நம் கைகளில் எட்டும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. அதனை உங்கள் கைகளில் கொண்டு வந்து கொடுப்பதுதான் நம் திராவிட மாடல் ஆட்சி. 100, 1,000 அல்ல 20 லட்சம் லேப்-டாப்களை கொடுக்க இருக்கிறோம். அதன் முதல்கட்டமாக 10 லட்சம் பேருக்கு வழங்குவதை தொடங்கியுள்ளோம்.
திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம். அதனால்தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என நம் ஆட்சி செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு இனி வரக்கூடிய காலம் தொழில்நுட்ப காலம். கம்ப்யூட்டர் காலம் என்று உணர்ந்து ஐ.டி. பாலிசி, டைடல் பார்க் கொண்டு வந்தார் கருணாநிதி. அதனால்தான் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகளவில் சாப்ட்வேர் துறையில் உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.
மனித இனம் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில் இதுபோதும் என்று சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு சாதனை படைத்திருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. மனிதர்களுக்கு காலம் கொடுத்து இருக்கும் 2-வது நெருப்புதான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.).
என்ன வேலைகளில் என்ன உயர் பொறுப்பில் இருக்கிறீர்கள். வெற்றிகரமாக தொழில் நடத்து கிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது? உங்களின் வளர்ச்சியால் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்வீர்கள்? சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு இருக்கும் இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமை மிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும். எல்லோரையும் வாழ வைக்க வேண்டும். இதுதான் எனது எண்ணம்.
லேப்-டாப்: எதிர்கால
தலைமுறையின் முதலீடு
இன்று உங்கள் கையில் வந்திருப்பது லேப்-டாப் பரிசு பொருள் கிடையாது. உலகத்தை நீங்கள் ஆள்வதற்காக உங்கள் கையில் வந்திருக்கும் வாய்ப்பு. எங்களை பொறுத்தவரையில், இது செலவு திட்டம் அல்ல. எதிர்கால தலைமுறையின் கல்வியில் செய்யப்படக்கூடிய முதலீடு.
நீங்கள் படிப்பதற்கான எல்லா வாய்ப்பையும் உருவாக்கி தருகிறோம். நீங்கள் படித்து உங்கள் எதிர்காலத்தை, வாழ்க்கை பாதையை நல்ல பாதையாக தேர்ந்தெடுங்கள். பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துவிடக்கூடாது. எல்லா துறைகளிலும் தினமும் நிறைய வளர்ச்சிகள் வருகிறது. பட்டப்படிப்போடு, மேம்பட்ட தொழில்நுட்பத்துக்கு ஏற்றமாதிரி நம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இனிமேல் தொழில்நுட்பத்தை படிப்பது என்பது விருப்பம் கிடையாது. உங்கள் துறையில் நீங்கள் நிலைத்து நிற்க அவசியம் ஆக இருக்கிறது. தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் நுழைந்துவிட்டது. அதனை முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும். செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு ஈடாகாது. நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாக, சிறப்பாக செய்யவும் தான் ஏ.ஐ. துணை நிற்கும்.
கடந்த தலைமுறை இளைஞர்கள் அறிவுக்காக பல புத்தகங்களை தேடி அலைய வேண்டும். ஆனால் இப்போது உங்களுக்கு தேவையான தகவல்களை எந்த இடத்தில் இருந்தும் பெறலாம். இந்த வளர்ச்சியை குறைச் சொல்லி முடங்கி போவது முட்டாள்களின் பாதை. இதனை பயன்படுத்தி வாழ்வின் உச்சத்தை தொடவேண்டியதுதான் உங்களின் வேலை.
நான் எப்போதும் சொல்வதுதான், நீங்கள் எதை பற்றியும் கவலைப்படா தீர்கள். படிங்க… படிங்க… படிங்க… உங்களை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது.
பணம் தேவைப்படுகிற உங்கள் அம்மாவுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குகிறோம். படிக்க பணம் தேவை என்றால் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருகிறோம். பொங்கல் கொண்டாட ரூ.3 ஆயிரம் கொடுக்கிறோம். பசியோடு காலையில் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். வேலை கிடைக்க உலகளவில் சென்று தொழிற் சாலைகளை கொண்டு வருகிறோம்.
மொத்தமாக சொல்ல போனால் பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். உலக பத்திரிகையே தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் மாநிலம் என்று சொல்கிறது. இதெல்லாம் போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு உங்களை நம்பிதான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம். எப்போதும் உங்கள் கூடவே இருப்போம். தமிழ்நாடு வெல்லட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது.
நிகழ்ச்சியில் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதிமாறன் எம்.பி., பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, மணிகண்டன், செஸ் சாம்பியன்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, வைசாலி, கபடி வீராங்கனை கார்த்திகா உள்பட பலர் பங்கேற்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் பேசுகையில், இந்த திராவிட மாடல் தொடர மாணவர்கள் உங்களுடைய அன்பும் ஆதரவும் மிக, மிக முக்கியம். உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களைத் தருவதற்கு நம்முடைய முதலமைச்சர் தயாராக இருக்கின்றார்.
கல்வி தான், யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத, பறிக்க முடியாத சொத்து என்று, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார். படிப்பில்லாமல் வெற்றி பெற்றவர்கள் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், படிப்பால் வென்றவர்கள் நிச்சயம் லட்சம் பேர் இருப்பார்கள்.
லேப்டாப் பெறுகின்ற மாணவச் செல்வங்கள் உங்களுடைய கல்வியும், அறிவும் மென்மேலும் சிறக்கட்டும் என்றார்.
![]()





